கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Friday, June 6, 2014

செவக்காட்டு சொல்கதைகள் -1

’அந்திமழை’ மின் இதழின் வாசகர்களுக்கு.. வணக்கம். கி.ராஜநாராயணன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று கதைசொல்லிகளிடம் இருந்து நூற்று கணக்கான நாட்டுப்புறக் கதைகளை சேகரித்துள்ளேன். அக்கதைகள் கி.ராவின் பெயரிலும் பின்னர் என் பெயரிலும் பல இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.

நான் களப்பணி செய்து சேகரித்த கதைகளில் இன்னும் எந்த இதழிலும் பிரசுரமாகாத சில கதைகளை’அந்திமழை’ மின் இதழ் மூலம் உங்களின் வாசக பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத்தொடரில் பிரசுரமாக இருக்கின்ற ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவையுடையதாக இருக்கும். தாத்தாவின் மடியில், பாட்டியின் அருகில் அமர்ந்து கதை கேட்க  ‘லவிக்காத’ (விதியற்ற) இன்றைய தலைமுறையினர்க்கு இக்கதைகள் புதியதொரு வாசிப்பனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன்.

இக்கதைகளைப் படிக்கும் போது உங்களின் மனக் கண் முன் உங்களின் பூர்வீக கிராமம் தோன்றினால் அதுவே என் வெற்றி என்று கருதுகிறேன். இனி கதைகள்.......


. பூவின் அழகைப் பூட்டி வைக்க முடியாது

”மூத்த தாரத்திற்குப் பிறந்த பிள்ளைகளை இளையதாரம் கொடுமைப் படுத்துவாள் “ என்ற கருத்தை வலியுறுத்தும் எத்தனையோ நாட்டுப்புறக் கதைகள் புழக்கத்தில் உள்ளன. அப்படிபட்ட கதைகளில் இது புதுமாதிரியான கதையாக இருக்கிறது “ என்று சொன்ன சுப்புத்தாத்தா கதை கேட்கக் கூடியிருந்த மக்களைப்பார்த்து தன் நரைத்த மீசையைத் தடவிக் கொண்டே கதை சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு ஊர்ல ஒரு பண்ணையார் இருந்தார், அவருக்கு கல்யாணமாச்சி, காலா காலத்துல அவர் பொண்டாட்டிகாரி அழகான ஒரு ஆம்பளப் பிள்ளையையும் பெத்தெடுத்தா, பையனும் வளர்ந்து இளம் பிராயத்தை அடைந்தான். அப்ப பார்த்து பண்ணையாரின் மனைவி திடிரென்று மாரடைப்பு வந்து இறந்துட்டா.
பண்ணையாரிடம் சொத்து சுகம் அதிகம் இருந்ததால், உமக்கும் ஒரு துணை வேண்டாமா? என்று சொந்தக்காரர்கள் கேட்டு , மறு வருசமே , ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டி வைத்தார்கள் . இளைய குடியாள் , மூத்த குடியாளின் பிள்ளையைக் கண்ணில் கண்ட போதெல்லாம் கரித்துக் கொட்டினார். அந்தப் பையனை எதிரியைப் போல பாவித்தாள்.
“மனம் போல் வாழ்வு” என்று சொல்வார்களே அது போல , இளையாளுக்கு வயிற்றில் கரு தங்களை, தன் வயிற்றில் ஒரு பிள்ளை பிறக்கலியே ! தன் புருசனின் சொத்து எல்லாம் மூத்த குடியாளின் மகனுக்கு போயிருமே! என்று நினைத்து, கரு, கருன்னு நெஞ்சு எரிச்சலோடு அலைந்தாள்,
ஏழெட்டு  வருசமாகியும் , இளையாள் வயிற்றில் ஒரு புழு , பூச்சி கூட தங்கல , அக்கம்பக்கத்து பெண்களெல்லாம் “ அவள் ஒரு மலடி” என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். “
மூத்த குடியாள் மகன் வளர்ந்து வாலிப வயசை அடைந்து விட்டான். பண்ணையாரும் தன் மகனுக்கு காலா காலத்தில் ஒரு கால்கட்டைப் போட்டிரனும் என்று நினைத்து , பெண் பார்க்க ஆரம்பித்தார். பண்ணையாருக்கு ஏகப்பட்ட வசதி வாய்ப்புகள் இருந்ததால், அவரின் அந்த ஒரு மகனுக்கு பெண் கொடுக்க நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு முன் வந்தார்கள்,
பண்ணையார் நாலு ஊருக்குப் போய் அலைந்து திரிந்து அழகான ஒரு பெண்ணைப் பார்த்து தன் மகனுக்கு பேசி முடித்தார். பெண் பார்க்க தன் இளைய மனைவியையும் , கூட்டிக்கிட்டுதான் போயிருந்தார். மூத்தாள் மகனுக்கு இவ்வளவு அழகான பெண்ணா? என்று வயிறு எரிந்தது. இளையாளுக்கு ஏதாவது ஒரு குறை சொல்லி இந்தப்பெண்ணை மூத்தாள் மகன் கட்ட விடாமல் செய்யவேண்டும் என்று தன் கணவரிடம் ஏதேதோ சொல்லிப்பார்த்தாள் , பண்ணையார் இந்த விசயத்தில் தன் மனைவியின் சொல்லைக் கேட்கவில்லை. பிறகு என்ன செய்ய மூத்தாள் மகன் தாலி கட்டினாலும் பெண் நம் வீட்டுக்கு தானே மருமகளாக வருவாள் , அப்போது வைத்து கொள்ளலாம் வரிசையை. என்று மனதிற்கு நினைத்து கொண்டு பண்ணையாரிடம் சரி , இந்த பெண்ணே நம் பையனுக்கு இருக்கட்டும் என்று உதடளவில் சொன்னாள்.
அந்தக் காலத்தில் பெண் பார்க்கும் படலம் எல்லாம் கிடையாது, அப்படியே சிற் சில இடங்களில் நடந்தாலும் , மாப்பிள்ளையின் தந்தையாரும் , தாயாரும், பெண்ணைப் பார்த்து சம்மதம் சொன்னால் போதும் , பெற்றோர்கள் பார்த்து முடித்த பெண்ணின் கழுத்தில் அந்த காலத்து மாப்பிள்ளைகள் மறுபேச்சுப் பேசாமல் தாலியை கட்டினார்கள்.
பண்ணையார் மகன் விசயத்திலும் பெண்ணை , மாப்பிள்ளையின், தந்தையும் , தாயும் நேரில் பார்த்ததோடு சரி. மாப்பிள்ளை பெண்ணை நேரில் பார்க்கவில்லை, இந்த விசயத்தை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு , பண்ணையாரின் மனைவி ஒரு சதித் திட்டத்தை தீட்டினாள்.

பண்ணையாருக்குத் தெரியாமல், பண்ணையார் காடுகரைகளை சுற்றிப் பார்க்கச் சென்ற சமயத்தில், தன் தோழி ஒருத்தியின் மூலமாக ஒரு ஓவியனைத் தன் வீட்டிற்கு வரவளைத்தாள் , “ அவலட்சணமான  முகமுடைய ஒரு இளம் பெண்ணின் படத்தை தைல வண்ண ஓவியமாக வரைந்து கொடு , நான் உனக்கு வேண்டிய மட்டும் பணம் கொடுக்கிறேன். “ என்றாள் ஓவியனிடம் இளையாள்.

ஓவியனுக்கு , பண்ணையார் மனைவியின் வேண்டுதல் அதிசயமாகப் பட்டது , எல்லோரும் அழகான பெண்ணின் படத்தைதான் ஓவியமாக வரைய சொல்லி விலை கொடுத்து வாங்குவார்கள். இவள் அவலெட்சணமான பெண்ணின் படத்தை வரைந்து கேட்கிறாளே ! இதில் ஏதோ சூது இருக்கிறது என்று நினைத்தாலும் கைநிறைய பணம் கிடைக்கிறதே என்று நினைத்து அவலெட்சணமான ஒரு பெண்ணின் படத்தை வரைந்து அதை இளையாளின் தோழியிடம் கொடுத்தான் , அவளும் , ஓவியன் கேட்ட பணத்தை பண்ணையாரின் மனைவியிடம் இருந்து வாங்கி வந்து ஓவியனிடம் கொடுத்தாள் .

பண்ணையார் முன் போலவே , காடு கரைகளைச் சுற்றிப்பார்க்க சென்ற போது , மூத்தாளின் மகனை பிரியமாக அழைத்து “அப்பா, உன் தந்தை உனக்கு மிகவும் அவலெட்சணமான பெண்ணையே பேசி முடித்திருக்கிறார் . நான் அந்தப்பெண் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னேன் . அவர் என் பேச்சைக் கேட்டகவில்லை. பெண் வீட்டார் ஏராளமாக நகை நட்டு போடுகிறார்கள் என்பதால் அந்தப்பெண்ணையே என் மருமகளாக்கிக் கொள்கிறேன் என்று சொல்லி வெற்றிலையும் மாற்றி உறுதி செய்து விட்டார்.. இனி நீ சொன்னாலும் அவர் கேட்கமாட்டார், உன் தந்தையின் பிடிவாத குணம்தான் உனக்கு தெரியுமே , எனவே நீயும் , இனி அந்தப் பெண் விசயத்தில் மறு பேச்சுப் பேசாதே . அந்தப் பெண்ணின் கழுத்தில் உன் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தாலியை கட்டிவிடு, ஆனால் தாலிகட்டும் போது கூட உன் மனைவியின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காதே தாலி கட்டிய பின்னும் நீ அவளை தொட்டு பேசாதே , அவளுடன் சேர்ந்து வாழாதே , இப்படியே ஒரு வருசப் பாட்டுக்கு இரு , அந்தப்பெண் வாழாமல் இருப்பதை விட தன் தாய் வீட்டுக்கே செல்லலாம் என்று சென்றுவிடுவாள் , அதன் பின் நானே உனக்கு ஒரு அழகான பெண்ணாப்பார்த்து கட்டி வைக்கிறேன் . உன் தந்தை உனக்கு பார்த்திருக்கிற பெண் இவள் தான் , அவளின் படத்தை யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டில் இருந்தே நான் உனக்காக எடுத்து வந்திருக்கிறேன் “ என்று நய வஞ்சமாகப் பேசி , மாப்பிள்ளையின் நெஞ்சில் நஞ்சை விதைத்து ஓவியனிடம் வரைந்து வாங்கிய அவலெட்சணமான பெண்ணின் ஓவியத்தையும் அவனிடம் காட்டினாள் .
“ தாய் இல்லாத போது , தாய்க்குத் தாயாய் இருந்து நம் சிற்றன்னை நமக்கு நன்மை செய்கிறாள் போலும் “ என்று நினைத்து ஏமாந்த மூத்தாள் மகன் நெஞ்சில் அந்த பெண்ணின் ஓவியம் , மனச்சுவரில் வரைந்த சித்திரம் போல் நின்று நிலை பெற்று விட்டது.

உரிய காலம் வந்தது , திட்டமிட்டபடி மூத்தாள் மகனுக்கு கல்யாணமும் நடந்தது , ஆனால் கூனியின் போதனையில் மனம் திரிந்த கை கேயி போல , பண்ணையார் மகன் , தன் மனைவியை , ஏறிட்டும் பார்க்கவில்லை, எதிர்த்தும்  விழிக்கவில்லை.

தொட்டுத்தாலி கட்டியதோடு சரி , அதன் பின் சித்திக்காரியிடம் தான் சாப்பாடு வாங்கி சாப்பிட்டான், கட்டிய மனைவியின் கட்டழகைப் பார்த்து ரசிக்காமல் கண் இருந்தும் குருடன் போல் வாழ்ந்தான்.

புதுப்பெண் பார்த்தாள் , தன் கணவன் தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் , பாராமுகமாக இருப்பதை நினைத்து இதில் ஏதோ சூட்சி  இருக்கிறது என்று நினைத்தாள்.
ஒரு நாள் தன் கணவனிடம் , என்னை என் தாயாரின் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள் என்றாள். மாப்பிள்ளைகாரனும் ‘சரி ‘ என்றான் , இளையாள் நாம் போட்ட திட்டம் நிறைவேறப் போகிறது என்று நினைத்து சந்தோஷப்பட்டு புதுமாப்பிள்ளையிடம் அவள் விருப்பப் படியே அவளை அவள் தாய் வீட்டில் கொண்டு போய் ஒப்படைத்து விட்டு வா என்றாள்.

புதுமாப்பிள்ளை , புதுப்பெண்ணை ஒரு வில் வண்டியில் அழைத்துக்கொண்டு சென்றான் , புதுப்பெண் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திருந்தாள் , ஒரு வண்டு அவள் தலையில் இருக்கும் மல்லிகைப் பூக்களை கடித்துக் குதறியது , வண்டின் செயலைப்பார்த்த புதுப்பெண் ,

“ பூ மணம் நுகரத் தெரியாத
புகல் வண்டே – என்
புருஷனைப் போல் நீயும்
முட வண்டோ …? “ என்று ராகம் போட்டுப் பாடினாள்

மனைவியின் பாட்டைக் கேட்ட புருஷக் காரனுக்கு தன்னையறியாமல் கோவம் மூக்கிற்கு மேல் வந்து விட்டதுஎனவே சித்தாத்தாள் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் மறந்து , அனிச்சையாதன் மனைவியை அடிக்க கையை ஓங்கிய படியே அவள் முகத்தை முதன் முதலாக ஏறிட்டுப் பார்த்தான்.

அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை , பதினாலாம் பக்கத்து பெளர்ணமி நிலவு போல் ஜொலி ஜொலி என்று ஜொலித்துக்கொண்டு இருந்தது அவள் முகம்.

பார்க்க பதினாராயிரம் கண் வேண்டும்என்பது போன்ற அழகியை மனைவியாகப் பெற்றும் இத்தனை நாளும் ஏறெடுத்தும் பார்க்காமல் , பாவியாக வாழ்ந்துவிட்டோமோ , சித்திக்காரிதான் பொய் சொல்லி நம் மனதை மாற்றி இருக்கிறாள் . இனிமேல் சித்திக்காரியின் முகத்திலேயே விழிக்க கூடாது என்று நினைத்து தன் மனைவியை அடிக்க ஓங்கிய கையில் அணைத்து முத்தமிட்டு கொஞ்சிய படி , வில் வண்டி ஓட்டும் வேலைக்காரனிடம் விரைவாக வண்டியை ஓட்டு , என்றான் .மாமியார் வீட்டுக்கு போன மாப்பிள்ளை அங்கேயே தன் மனைவியுடன் சந்தோசமாக வாழ ஆரம்பித்தான் , சித்தியின் வீட்டை மறந்தே விட்டான்
- See more at: http://andhimazhai.com/news/view/sevakkaadu1.html#sthash.PDgxN7Os.dpuf

1 comment:

Guru Manikandan said...

இந்தப் புத்தகம் "செவக்காட்டு சொல்கதைகள் -1" சென்னையில் எங்கு கிடைக்கும் - தொடர்பு எண் கொடுக்கவும். சென்னையில் கி.ராவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது விழாவில் உங்களின் அருமையை மிக அருகில் கேட்கும் வாய்ப்பினை பெற்றேன். மிக்க நன்றி.

குரு. மணிகண்டன், வாசிப்புலகம், சென்னை - 9962554348