கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-8

 தெல்லி வீரன்


ரொம்பக் காலத்துக் முந்தி மானூர்க்கொளத்து மடையில இருந்து தண்ணி வெளிய வரல.பாதிக்கொளம் நிறைய தண்ணி கிடக்கு ஆனா மடையைத் திற்ந்தா பாசனத்துக்குத் தண்ணி வர மாட்டேங்கு
மடப்பாசன பத்துல (வயல்ல)நெல் பயிர் விக்கலும் கக்கலுமா (கதிர் வெளியே வந்தும் வராமலும்)பொதிப் பயிரா இருக்கு இந்த மாதிரி நேரத்துலதான் நெல்லு பயிர் தண்ணிய நிறையக் குடிக்கும்.
மடையில இருக்குற சட்ரஸை(தண்ணீரைத் திறக்க அடைக்க குளத்து மடையில் இருக்கு இரும்பாலான கருவி)முழுசா திறந்து வச்சாச்சி ஆனாலும் மடைக்கு வெளியே தள்ளி வர மாட்டேங்கு.
மடைன்னா அது ரொம்பப் பெருசு ஒரே நேரத்துல ரெண்டு மாடுகள் முன்னும் பின்னுமா போயிட்டு வந்திரலாம் இவ்வளவு பெரிய மடையின் கண்ண யாராலையும் லேசில் அடைச்சிர முடியாது.
மடைக்குள்ள இறங்கி பார்க்கிற துணிச்சலும் யாருக்கும் இல்லை.கொளத்துக்குள்ள பாதி அளவு தண்ணி தேங்கிக் கிடக்கும் போது சட்ரஸை திறந்தா தண்ணி கொடுக்கிற அழுத்தத்துல எப்பேர்ப்பட்ட அடைப்பும் பிச்சிக்கிட்டு போயிரும் அதனால இது ஏதோ தெய்வக்குத்தம்முன்னுதான் மக்கள் நினைச்சாங்க.சேதியை அப்ப ஊரை ஆண்டுக்கிட்டிருந்த மகாராசக்கிட்ட போய்ச் சொன்னாங்க.
மகாராசாவும் குதிரையில் ஏறி குளத்துக் கரைக்கு வந்து பார்த்தாரு கூடி நின்ன மக்களைப் பார்த்து ராசா குளத்து மடையைத் திறக்க உங்கள்ல யாரு முன் வராங்களோ அவங்களுக்கு இந்த கொளத்துல தலைமுறை தலைமுறைக்கும் வெளயற மீன் பாசியில(மீன் வகையராக்கள்)நாலூல ஒரு பங்கைச் சன்மானமா எழுதித் தாரேன்னார்.
அந்தக் கூட்டத்துல தெல்லி வீரன்னு ஒருத்தன் இருந்தான் தெல்லி வீரன்ங்கறது அவனோட பட்டப் பெயர் அவன் குளத்துல இறங்கி வலைவீசி மீன் பிடிக்கிறவன் அந்தக் காலத்துல கொளத்துல புடிக்கிற மீனை நாய் நரிக பறவை பட்சிக கை வைக்காம (எடுக்காமல்)இருக்கத் தென்னை ஈக்கியால் செஞ்ச ஒரு பெரிய பாத்திரத்த வைச்சிருந்தாக அதுக்குத் தெல்லின்னு பேரு அதோடு அதுல தண்ணியும் தேங்காது அதனால மீன்களப்போட்டு வைக்க தெல்லி ரொம்பத் தோதுவா இருக்கும்.
மீன் பிடிக்கறதையே குலத் தொழிலா கொண்ட அந்தத் தொல்லி வீரன் மகாராசா முன்னால் வந்து நின்னு இந்த மடையை நான் திறந்திருதேன் உயிரை பணயம் வைச்சித்தான் மடையைத் திறக்கணும் மடையைத் திறந்த பிறகு நான் அனேகமா உயிரோட இருக்க மாட்டேன் அதனால நீங்க சொன்னபடி என் வம்சா வழியினருக்கு தலைமுறை தலைமுறைக்கும் இந்தக் கொளத்து மீன் பாசியில நாலில் ஒரு பங்கு பாத்தியதை உண்டுன்னு செப்புப் பட்டயம் எழுதிக் கொடுத்திரணும்னு சொன்னான்.
மகாராசாவும் ஊர் மக்கள்முன்னால சரின்னு சொல்லிட்டார் உடனே தெல்லி வீரன் குருவித்திலை (குலத்தில் உள்ள தண்ணீரின் அலவைக் காட்ட உதவும் கல்தூண்)பக்கமா போய் முங்கி நேரே மடைக்குள்ளே போனான் உள்ள வார வீச்சத்தை வச்சே மடையை அடைச்சிகிட்டு இருக்கிறது என்ன சங்கதிதான்னு தெரிஞ்சிக்கிட்டான்.
தண்ணியில இருந்து மேலே வந்தான் குளத்தை விட்டு மேலே வ்ந்தவங்கிட்ட மகராசா என்னப்பா சங்கதி மடையை என்னது அடைச்சி வச்கிருக்குன்னு கேட்டார்.
மகராசா ஒரு பெரிய மலப் பாம்பு போய் உள்ள வசமா மடைக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்கு அதனால முன்னயும் போக முடியில பின்னயும் போக முடியுல இன்னைக்குப் பொழுது விடியறத்துக்குள்ளே மடையை திறந்து விட்டிருதேன் மடை தெறந்த பிறகு அனேகமா நான் உயிரோட வெளிய வராது அந்த அண்டவனோட சித்தம்தான் என் உயிருக்கு ஆபத்தாகி நான் போயிட்டா என்னயிந்த மடைப் பக்கத்துலே கரை ஒரே புளிய மரத்தடியில் புதைச்சிடுங்கன்னு சொல்லிட்டு வீட்டைப் பார்த்து போனான் தெல்லிவீரன்.
சாயங்காலம் தெல்லி வீரன் குளத்து மடைக்கு வந்தான் அவன் கையில ஒரு இரும்பாலான வலை இருந்துச்சி அந்த வலையைச் சுத்தி சின்ன சின்னதா கத்திகள் வைச்சி கட்டப்பட்டிருந்திச்சி தன்னோட மச்சினனைக் கூப்பிட்டு என் உடம்பு மேல இந்த இரும்பு வலையை போட்டு கட்டுன்னான் மச்சினனும் தெல்லி வீரன் சொன்னப் படியே செஞ்சான்.
இப்ப தெல்லி வீரனோட உடல் முழுசும் ஒரு கவசம் மாதிரி இரும்பு வலையம் சுத்தி இருந்துச்சி அந்த இரும்பு வலையில் நூற்றுக்கணக்கான சிரிய கத்திகள் வெளியே நீட்டியபடி கட்டப்பட்டிருந்திச்சி தெல்லிவிரன் எல்லோரையும் கையெடுத்துக் கடைசியா ஒரு முறை கும்பிட்டு குளத்துக்குள்ளே இறங்கி குருவித்திலை ஒரமா முங்கினான்.
தெல்லிவீரன் மடைக்குள்ள போயி ஒரு நாழிய நேரத்துக்கு பெறகு புற மடையில முதல்ல ரத்தமா ஒழுகிச்சி அப்புறம் செத்த நேரம் கழிச்சி ஒரு பெரிய மலைபாம்போட தலை வெளியே தெரிஞ்சது.
பொழுது அடையவும் நிலா உதிக்கவும் மடைக்குள்ள இருந்த மலைப்பாம்பு மெல்ல கொஞ்சங் கொஞ்சமா வெளிய வர ஆரமிச்சிச்சு பாம்பு மேலேல்லாம் ரெத்தகளரி கத்திக்காயம் மலப்பாம்போட தெல்லி வீரன் கட்டிப் பிடிச்சி மடைக்குள்ளேயே உருண்டுருக்கான்னு தெரிஞ்சது அந்த பாம்பு உடம்புல தெல்லி விரன் கட்டி இருந்த இரும்பு வலையில உள்ள சின்ன கத்தி சுத்தியிருந்துச்சி மடையை விட்டு பாம்பு வெளியே பீறிகிட்டு வர ஆரம்பிச்சிது தண்ணி வந்த வேகத்துல பாம்பும் மடையை விட்டு வெளியே வந்துச்சு.
நாலாளு உசரத்துக்கு ஒரு பனை மரத்தண்டிக்கு இருந்த அந்தப் பாம்பைபார்த்து அங்க கூடி நின்னவெங்களெல்லாம் மூக்கு மேல விரலை வச்சாங்க மடையை விட்டு வெளியே வந்த பாம்பை பிடிக்கிற துணிச்சல் யாருக்கும் இல்லை சம்சாரிகளுக்கு மடை திறந்து வெள்ளம் வந்த சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் மடையைத் திறக்க மடைக்குள்ளாற போன தெல்லி விரனைக் காணோமேன்னு கவலைப்பட்டாங்க.
மலைபாம்பு முழுசா வெளியே வந்த பெறகு தெல்லி வீரன் அந்த மலைப்பாம்போட வாலை பிடிச்சிக்கிட்டு மடைகுள்ள இருந்து குளத்துத் தண்ணியோட தண்ணியா வெளியே வாரான் அவன் மேலேல்லாம் அப்பளமா நொறுங்கி போய் இருந்துச்சி உடம்பெல்லாம் கத்திக் காயம் அவன் வலையோட கட்டிக் கிட்டுப்போன கத்தி அவனையே குத்தி உயிர அடுத்துச்சி.
சம்சாரிகளுக்கு பாசனத் தண்ணிக்காக மடையைத் திறக்க தன் உயிரையே பணயமா வச்சி மலைப்பாம்போட போராடி செத்த தெல்லிவீரனை அவன் விருப்பப்படியே அவன் சொன்ன இடத்தில் புதைச்சிருங்கன்னு உத்தரவிட்டார் மகராசா தெல்லி வீரனை அடக்கம் பண்ணும்போது மகராசாவும் வந்திருந்து மரியாதை செஞ்சாரு.
கொஞ்ச நாள் கழிச்சி ஊர் மக்கள் வேண்டிக் கிட்டதாலே தெல்லி வீரனை புதைச்ச இடத்துல ஒரு கோயிலைக் கட்டி மீன் பாசி வரவு செப்பு பட்டயமும் எழுதிக் கொடுத்தாரு மகராசா இன்னும் அந்த ஊர்மக்களும் சம்சாரிகளும் குளத்தை நம்பி வாழுற வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் தெல்லி விரனை காவல் தெய்வமா கும்பிட்டுகிட்டு வராகன்னு தெல்லி விரன் சாமி கதயைச் சொல்லி முடிச்சாரு விரகேரளம் புதூரைச் சேர்ந்த இராமர்

No comments: