கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, August 21, 2013

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-2

ரமணர் நிகழ்த்திய அற்புதங்கள் -1 அட்ஷய பாத்திரம்

ரமணர் விருபாஷிக் குகையில் தங்கி இருந்த காலம். ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீ பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பொழியத் துவங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது. தரிசிக்க வந்தவர்கள் யாரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை. மாலை கடந்து இரவும் வந்து விட்டிருந்தது. இரவு எட்டு மணியைக் கடந்து விட்டதால் ஒவ்வொருவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை. பகவானின் அடியவரான பழனிசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.பகவானும், ‘சரி, சரி மழை விடுவதாகத் தெரியவில்லை. இவர்களோ பாவம் பசிக்களைப்பில் இருக்கிறார்கள். அதனால் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுஎன்றார்.உடனே பழனிசாமி உணவை  சிறு சிறு உருண்டையாக உருட்டி வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கத் தொடங்கினார். அவர்களும் அந்தச் சிறு கவளங்களை ரமணப் பிரசாதமாக நினைத்து வாங்கி உண்டனர். மூன்று பேருக்கு மட்டுமே வைத்திருந்த அந்த உணவு கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிறு நிறைந்து விட்டதுடன் அறுசுவை உணவு உண்ட திருப்தியும்  ஏற்பட்டது. தண்ணீர் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு வயிறு நிறைந்திருப்பதைக் கண்டு எல்லாம் ரமணரருள்என்று எண்ணித் தொழுதனர் பக்தர்கள். எல்லாவற்றிற்கும் காரண சூத்ரதாரியான ரமணரோ ஒன்றும் பேசாமல் எங்கோ மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார்.

ரமணர் நிகழ்த்திய அற்புதங்கள்- 2 ஞான வைத்தியம்

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.ஏன்?கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான். ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.ஆமாம். அது என்ன தெரியுமா?விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்? ஓர் இளைஞன்.ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்!

ரமணர் நிகழ்த்தியஅற்புதங்கள் -3 கள்வருக்கும் கருணை

1924-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 26-ஆம் நாள் நள்ளிரவு; மணி 11-30 இருக்கும். சில கீற்றுக் கொட்டகைகளேஅப்பொழுது இருந்த ரமணாசிரமம். ஆனால், இது பணம் பெருத்த திருமடம் என்றெண்ணிய சில திருடர்கள் அங்கு வந்து புகுந்து ஜன்னல்களை நொறுக்கி அட்டகாசம் செய்தனர். பகவான் ஸ்ரீ ரமணர் படுத்திருந்த அறையில் கூடவே சில அடியார்களும் இருந்தனர். பகவான் திருடர்களை உள்ளே வரச் சொல்லி, அவர்களுக்கு வேண்டியதை இருளில் பார்த்து எடுத்துக் கொள்வதற்காக ஹரிக்கேன் விளக்கு ஒன்றை ஏற்றித்தரச்செய்தார். " உன் பணமெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்?" என்று உறுமினர் கள்வர்கள். " நாங்கள் பிட்சை எடுத்து உண்ணும் சாதுக்கள்; எங்களிடம்பணம் இல்லை; இங்கே உள்ள எதை வேண்டுமானாலும் எடுத்துச்செல்லுங்கள்; நாங்கள் வெளியேறி விடுகிறோம்." என்று  பகவான் கூறி அடியார்களுடன் வெளியில் வந்து உட்கார்ந்தார். வெளியேறும் போது ஒவ்வொருவரையும் திருடர்கள் அடித்தனர். ஸ்ரீ பகவானுக்கும் இடது தொடையில் ஓர் அடி விழுந்தது! "அப்பா! உனக்கு திருப்தியாகாவிட்டால் மற்றொரு தொடையிலும் அடி" என்று பரிந்து கூறினார் பகவான்!கள்வர்க்கும் காட்டிய கருணை அம்மட்டோ! எதிர்த்துத் திருடரைத் தாக்கக் கிளம்பிய இளஞ்சீடர் ஒருவரைப் பகவான் தடுத்து," அவர்கள் தர்மத்தை அவர்கள் செய்யட்டும்; நாம் சாதுக்கள்; நம் தர்மத்தை நாம் கைவிடக்கூடாது; எதிர்ப்பதால் சம்பவிக்கும் விளைவுக்கு நாளை உலகம் நம்மையே குறை கூறும். நம் பற்கள் நம்நாக்கைக் கடித்துவிட்டால் பற்களை உடைத்தா எறிந்துவிடுகிறோம்?" என்று சாந்தோபதேசம் செய்தனர்.சில நாட்களில் அத் திருடர்களை காவல் துறையினர் பிடித்துக் கொண்டுவந்து ஸ்ரீ பகவான் முன்னிலையில்நிறுத்தினர்.. "பகவானே, இவர்களுள் யார் தங்களை அடித்தவன்; காட்டுங்கள்! " என்று அவர்கள் வேண்டினர். " நான்  யாரை(முன் ஜன்மத்தில்) அடித்தேனோ அவன் தான் என்னை அடித்தான்! அவனை நீர் கண்டுபிடியும்!! " என்று கூறி நகைத்தனரே தவிர அக்குற்றவாளியைக் காட்டியே கொடுக்கவில்லை.

ரமணர் நிகழ்த்திய அற்புதங்கள்-4
பிள்ளையாருக்குக் கொடுத்த பழம்

கே.என்.சாஸ்திரி என்பவர் ரமணரைப் பார்க்கப் போகும்போது கையில் ஒரு சீப்பு வாழைப்பழம் கொண்டுபோனார். போகும் வழியில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குப் போனார். சீப்பிலிருந்து பழத்தைப் பிய்த்தெடுக்காமலே சாஸ்திரி ஒரு பழத்தை மட்டும் அங்கிருந்த பிள்ளையாருக்கு மனதாலே நிவேதனம் செய்தார்.இறுதியில் அவர் பகவானைப் பார்த்து பழங்களைக் கொடுத்தார். அங்கிருந்த ஒரு சாது பழச்சீப்பை குகைக்குள் வைப்பதற்காக எடுத்துப் போகும் நேரம் பகவான் ஒரு நிமிஷம், பிள்ளையாருக்குக் கொடுத்த பழத்தை நாம எடுத்துக்கலாம்என்று சொல்லி ஒரு பழத்தை வாங்கிக் கொண்டதும் சாஸ்திரியார் வியந்து போனார். எது தெரியாது பகவானுக்கு?

ரமணர் நிகழ்த்திய அற்புதங்கள்-5
உணர் நிலையில் அறுவை சிகிச்சை

ரமண மகரிஷிக்கு புற்று நோய் வந்து அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்த போது ரமணர் தனக்கு மயக்க மருந்து தர வேண்டாம் என்று கூறி விட்டார்! டாக்டர்கள் எத்தனையோ சொல்லியும் ரமணர் பிடிவாதமாக இருக்கவே வேறு வழியின்றி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதை ரமணர் புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். இது எப்படி சாத்தியமாயிற்று? தேகம் வேறு ஆன்மா வேறு என்பதை ரமணர் புரிந்துகொண்டிருந்தார். தேகத்திற்குத்தான் வலி. ஆன்மா, வலி உணராது. அவர் மனம் ஆன்மாவில் லயித்து விட்டதால் தேகம் வலி உணரவில்லை! இந்த மெய்ஞான உண்மைக்கு எந்த மருத்துவ அகராதியிலும் விளக்கம் கிடையாது.இந்த ஆன்மா, மனம் என்கிற கடிவாளத்தைப் பிடித்தபடி உணர்வுகள் என்ற குதிரைகளை வாழ்க்கை என்கிற பாதையில் வழி நடத்திச் செல்கிறது. புத்தி தான் ஆத்மா. அதுதான் பிரும்மம். ஜீவன் வெறும் ஏஜெண்டு மாத்திரம்தான். ஆத்மாவின் ஆணைகளை வழி நடத்தும் தொழிலாளி. வலியை உடல் உணருகிறது. ஆன்மா உணருவதில்லை.இந்த மெய்ஞான வேறுபாடுகளை ஞானிகள் உணர்ந்திருந்தார்கள். அதுதான் பிரும்ம தத்துவம்

ரமணர் நிகழ்த்திய அற்புதங்கள்-6 மகான் சேஷாத்ரி உருவில் ரமண்ர்

அவர் ஒரு ரமண பக்தர். ஆசார அனுஷ்டானங்களில் நம்பிக்கை உடையவர். ஆனால் அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. கஞ்சா போன்ற போதை வஸ்துவை தியானம் செய்யும் பொழுது உபயோகித்து வந்தார். அவ்வாறு உபயோகிப்பதன் மூலம் இறை உணர்வில் தீவிரமாக நிலைத்து இருக்க முடியும் என்று நம்பினார். சித்தர்கள் சிலரும், முனிவர்கள் பலரும் உபயோகித்தது தானேஎன்று தமக்கு அறிவுரை கூறிய நண்பரிடம் எதிர்வாதம் செய்தார். அவர் இவ்வாறு போதைப் பொருளைப் பயன்படுத்துவது ஒரு நாள் பகவான் ரமணரின் கவனத்துக்கு வந்தது. ரமணர் பக்தரைக் கூப்பிட்டு கண்டித்தார். அத்துடன், “இதைச் சாப்பிடாதே. இது நிச்சயமாய் கெடுதல்தான் பண்ணும்என்று அறிவுறுத்தினார்.ஆனால் பக்தர் அதனைக் கேட்கவில்லை. தினந்தோறும் கஞ்சாவை உபயோகித்து வந்தார்.ஒருநாள் தியானத்தில் அமர்வதற்கு முன் அதனை உபயோகித்தார். அவ்வளவு தான். சிறிது நேரத்தில் அவருக்கு தலை சுற்றியது. மயக்கமாய் வர ஆரம்பித்தது. இறை உணர்விற்குப் பதிலாக வரிசையாக கீழ்த்தரமான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. உடலெல்லாம் எரிய ஆரம்பித்தது. பித்துப் பிடித்தவர் போலானார். ரமணரிடம் போய்ச் சொல்லலாமென்றால் அவர் அறிவுறுத்தியதை மீறித் தான் போதை வஸ்துவைப் பயன்படுத்தியது தெரிந்தால் கோபிப்பார் என்று எண்ணினார். பகவான் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டு ஒன்றும் புரியாமல் கோவிலைச் சுற்றி சுற்றி வந்தார்.
வழியில் சிவகங்கைக் குளம் அருகே மகான் சேஷாத்ரி சுவாமிகள் உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். மகான் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். கேவினார். தன் நோயைத் தீர்க்குமாறு இருகரம் கூப்பிவேண்டினார்.சுவாமிகள், “அடேய், நான் தான் அப்போவே சொன்னேனே! சாப்பிடாத, சாப்பிடாதன்னுகேட்டியா? இப்போ ஏன் இப்படி அவஸ்தைப்படறே!என்று கோபித்தார்.பக்தருக்கோ ஒன்றுமே புரியவில்லை. இவர் எப்போது நம்மிடம் கஞ்சாவைச் சாப்பிடாதே என்று சொன்னார், ஏன் இப்படி உளறுகிறார்என்று நினைத்தார்.சுவாமிகளோ மீண்டும் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொன்னார். பக்தருக்கு ஒரே ஆச்சர்யமாகி விட்டது. தான் இதற்கு முன் சேஷாத்ரி சுவாமிகளைச் சந்தித்ததும் இல்லை. தன் போதைப் பழக்கம் பற்றி மகானிடம் எதுவும் கூறியதுமில்லை. அப்படி இருக்க மகான் ஏன் இப்படிக் கூறுகிறார் என நினைத்து வியந்தார்.பின்னர் சேஷாத்ரி சுவாமிகள், சிறிது மணலை அள்ளி அவர் மீது வீசினார். உடன் பக்தரின் மேனி எரிச்சல் நின்று விட்டது.பின்னர் தான் பக்தருக்குப் புரிந்தது, “நான்என சேஷாத்ரி சுவாமிகள் குறிப்பிட்டது பகவான் ரமணரைத்தான் என்று. பகவான் ரமணர் தனக்குக் கூறிய அறிவுரையையே சேஷாத்ரி சுவாமிகள் தான் கூறியதாக திரும்பக் கூறினார் என உணர்ந்து கொண்டார். இருவரும் உடல் வேறாக இருந்தாலும், உணர்வால் ஒன்றாகவே இயங்கி வந்தனர் என்பதைப் புரிந்து கொண்டார். அது முதல் அந்த தீய போதைப் பழக்கத்தை விட்டு விட்டார்.மகான்கள் நேரடியாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளாவிட்டாலும், சூட்சுமத்தில் தொடர்பில் இருப்பர் என்பதையும், ஓரிடத்தில் நிகழ்வதை மற்றொருவர் அங்கில்லாவிட்டாலும் தெளிவாக உணர்ந்திருப்பர் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறதல்லவா


ரமணர் நிகழ்த்திய அற்புதங்கள்-6 வெள்ளிக்காசும் தங்கக்காசும்

பகவானை நாடி வந்த பக்தர்களில் பல தரத்தினர் இருந்தனர். மந்திர ஜபம் செய்பவர்கள், உபாசகர்கள், சக்தியை வழிபடுவோர் இடைவிடாது தவம், தியானம் செய்பவர்கள் என பலர் அவர்களில் இருந்தனர். அவர்களுக்கும் ரமணர் “உன்னையே நீ அறிவாய்” என்பதையே உபதேசித்தார். ”’தான்’ என்ற அகந்தை இருக்கும் வரை ஒருவரால் ஒருக்காலும் ஆண்டவனைப் பற்றி அறிய முடியாது. முதலில் ’தான், தான்’ என்று தோன்றும் அந்த எண்ணத்தின் பிறப்பிடம் எது என்பதை அறிவாய். அதை அறிந்து கொண்டு விட்டால் பின்னர் எல்லாமே தாமாய் விளங்கும்” என்பதே மஹரிஷிகளின் அருள் மொழி.

ஒருநாள் ஒரு சாது பகவானை நாடி வந்தார். அவர் மந்திர சித்தி பெற்றவர். அவர் அங்கிருந்த பக்தர்களைப் பார்த்து, “ இதோ பாருங்கள் என்னால் ஒரு செப்புக் காசை தங்கமாக மாற்ற முடியும். உங்கள் பகவானால் முடியுமா?” என்றார்.
பகவான் வழக்கம் போல் மௌனமாக இருந்தார்.
ஆர்வம் கொண்ட சில பக்தர்கள் அந்தச் சாதுவிடம் ஒரு செப்புக் காசைக் கொடுத்தனர். அவர் அதை வாங்கித் தன் கையில் சில நிமிடம் வைத்திருந்தார். பின்னர் அவர் அதை பக்தர்களிடம் திருப்பிக் கொடுத்த போது அது தங்கமாக மாறி ’பள பள’வென மின்னியது.“பார்த்தீர்களா, என் ஆற்றலை. உங்கள் பகவானால் இது முடியுமா, சொல்லுங்கள்” என்று எகத்தாளமாகப் பேசிய அந்தச் சாது பகவானைப் பார்த்தும் கிண்டலாகச் சிரித்தார்.பகவான் உடனே, “சரி, சரி. இன்னொரு செப்புக் காசையும் அவரிடம் கொடுங்கள். அதையும் தங்கமாக மாற்றட்டும்” என்றார்.

அந்தச் சாது, ‘ஆஹா.. என்ன பிரமாதம். கொடுங்கள். என் மந்திர சக்தியால் மாற்றிக் காட்டுகிறேன்” என்று சொல்லி வாங்கிக் கொண்டார்.
நிமிடங்கள் கழிந்து நாழிகை ஆனது. அந்தச் சாதுவும் விடாமல் பல மந்திரங்களை முணுமுணுத்தவாறு இருந்தார். காசை வலக் கையிலிருந்து இடக் கைக்கும் இடதிலிருந்து வலதிற்கும் மாற்றிக் கொண்டே இருந்தார். பல மணி நேரம் தான் கடந்ததே தவிர, அந்தச் செப்புக் காசை தங்கமாக்க அவரால் முடியவில்லை.
“என்னால் முடியவில்லை. பகவானுக்கு முன்னால் என் சக்தி எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்” என்று சொல்லி தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பகவானை நமஸ்கரித்து விட்டு அந்த இடம் விட்டுச் சென்றார் அந்தச் சாதுபகவான் பக்தர்களிடம், “இந்த மாதிரி சித்து விளையாட்டுகள் எல்லாம் சில பயிற்சிகளால், மந்திர அப்பியாசத்தால் சித்திக்கும். ஆனால் அதனால் ஆன்மாவிற்கு எந்தப் பயனும் இல்லை. ஆத்ம விசாரமே தவம். யோகம், மந்திரம் தவம், தியானம் எல்லாமே ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுதான் மிகவும் முக்கியம். இந்த மாதிரி சித்து விளையாட்டுக்களில் கவனம் கொள்ளாதீர்கள். அது உங்களை கீழே இழுத்து விடும்” என்று அறிவுரை பகன்றார்.

ரமணரின் பரிவு

1.குழந்தையும் குரங்குக் குட்டியும்

ஒரு நாள் ஸ்ரீ ரமணர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே புதிதாகப் பிறந்த இளங்குட்டியுடன் ஒரு தாய்க்குரங்கு எட்டிப் பார்த்தது. ரமணரிடம் வர முயற்சி செய்துகொண்டிருந்தது. அன்பர்கள் அந்தக் குரங்கை விரட்டினார்கள்.அப்போது ரமணர், “ஏன் அதைத் துரத்துகிறீர்கள்? அது இங்கே வந்து தன் இளங்குழந்தையை எனக்குக் காட்ட ஆசைப்படுகிறது. உங்களுக்குக் குழந்தை பிறந்தால் மட்டும் என்னிடம் நீங்கள் கொண்டு வந்து காட்டுகிறீர்களே? அப்படி நீங்கள் உங்கள் குழந்தையை என்னிடம் கொண்டு வரும்போது யாராவது தடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து காட்டலாம். இந்தக் குரங்கு மட்டும் கொண்டு வந்து காட்டக்கூடாதா ? இது என்ன நியாயம் ?” என்று கேட்டார்.அன்பர்கள் அடங்கி விட்டனர். குரங்கு தன் குட்டியுடன் உள்ளே வந்து பகவானிடம் சிறிது நேரம் தன் குட்டியை வைத்திருந்துப் பின் எடுத்துச் சென்றது.
2.முக்த்தி அடைந்த பசு

ஆஸ்ரமத்தில் லட்சுமி என்ற பசு இருந்தது. அது 6 மாதக் கன்றுக் குட்டியாக இருக்கும்போது ரமணரிடம் வந்தது. 1924 முதல் 1948 வரை அவருடன் வாழ்ந்தது. ஒரு நாள் அது நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்டது. ரமணர் மாட்டுப் பட்டிக்குச் சென்று லட்சுமிக்கு அருகில் அமர்ந்து தம்மடியில் அதன் தலையை எடுத்து வைத்துக் கொண்டார்.“லட்சுமியம்மா ! லட்சுமியம்மா !” என்று சொல்லி தம் திருக்கரத்தால் அதன் தலையைத் தடவிக் கொடுத்தார். லட்சுமியின் உயிர் பிரிந்தவுடன், சடலத்தை நன்னீரால் குளிப்பாட்டி, மஞ்சள்பூசி, நெற்றியிலே குங்குமம் இட்டு, மாலை அணிவித்து, பட்டுத்துணி கட்டி, தூபதீபம் காட்டி, சமாதி செய்தார்கள். கடைசிவரை ரமணர் அருகே இருந்தார்.


3.நானும் ஒரு பரதேசிதானே

ஒரு சமயம் ஆஸ்ரமத்திலே விசேஷ பூஜைகள் நடந்தபோது சாப்ப்பாட்டுக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்தன. கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் ஆஸ்ரம நிர்வாகி கோபம் அடைந்து ஏழைப் பரதேசிகளைப் பார்த்து, “பரதேசிகள் உள்ளே வரவேண்டாம். சற்று நேரம் பொறுத்துப் பின்பு வரலாம்” என்று கடுமையாகச் சொன்னார். மற்றவர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். அனைவருக்கும் இலை போடப்பட்டது. வழக்கமான இடத்தில் ரமணர் இல்லை. பகவான் எங்கே ? எல்லாரும் தேடினார்கள். பகவானைக் காணவில்லை.அவர் தொலைவில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஆஸ்ரம நிர்வாகஸ்தர்கள், “பகவான் ஏன் இங்கு வந்து விட்டீர்கள்? சாப்பிட எல்லோரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று கேட்டார்கள்.அதற்கு ரமணர், “பரதேசிகள் உள்ளே வர வேண்டாம் என்று சொன்னார்கள். நானும் ஒரு பரதேசிதானே?” என்றார். ஆஸ்ரமவாசிகள் தங்கள் தவறை உணர்ந்து அனைவரையும் ஒரே நேரத்தில் அமர்த்தி சமாராதனை செய்தார்கள்.
4.குருவி முட்டை பெற்ற பேறு

ஒரு நாள் பகவான் மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த தம் துண்டை எடுக்கும்போது அங்குக் கட்டப்பட்டிருந்த குருவிக்கூடு அசைந்து அதில் இருந்து ஒரு முட்டை கீழே விழுந்துவிட்டது. விரிசல்விட்டது. பகவான் மிகுந்த வருத்தமடைந்தார்.ஒரு துணியினால் விரிசலடைந்த முட்டையைச் சுற்றி மீண்டும் கூட்டுக்குள் வைத்தார். “ஐயோ, பாவம் ! இதன் தாய் எவ்வளவு வருத்தமடையும் !”இதன் தாய்க்கு என் மீது எவ்வளவு கோபம் உண்டாகும்?”இந்த விரிசல் கூட வேண்டும்” என்றார்.மூன்று மணிநேரங்களுக்கு ஒருமுறை முட்டையை எடுத்துத் துணியை நீக்கிப் பார்ப்பார். முட்டையைத் தம் உள்ளங்கையில் வைத்துக் கொள்வார். அதன்மீது தம் கருணைப் பார்வையை செலுத்துவார். பிறகுக் கூட்டில் வைப்பார். இப்படி ஒரு வாரம் கழிந்தது.
குருவி அடைகாத்ததோ இல்லையோ பகவான் அதைவிட அன்புடன் அந்த முட்டையைப் பாதுகாத்தார். தம் திருக்கண் பார்வையினால் கவசமிட்டுக் காப்பாற்றினார். ஏழாவது நாள் விரிசல் மூடிக்கொண்டு விட்டது !பகவானுக்குப் பரம சந்தோஷம். பரமதிருப்தி.சில நாட்கள் சென்றன. அந்த முட்டையில் இருந்து சின்னஞ்சிறு குஞ்சு வெளி வந்தது. பகவானுக்கு மேலும் சந்தோஷம் ! அந்தக் குஞ்சைத் தம் திருக்கரத்தில் எடுத்துக் கொஞ்சினார். தடவிக் கொடுத்தார்.தாமே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தவரைப் போல ஆனந்தமடைந்தார்.

5.உயரம் உயர்வு அல்ல

முற்பகல் நேரம்.ஹாலின் உள்ளே வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால் பகவான் வெளியே உள்ள மரத்தடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். சுற்றி பக்தர்கள் அமர்ந்திருந்தனர். பகவான் உபதேச சாரத்திலிருந்து சில பாடல்களைக் கூறி அதன் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு வெளிநாட்டு பக்தர் ஒருவர் வந்தார். எல்லோரும் கீழே அமர்ந்திருந்ததைப் பார்த்த அவரும் கீழே அமர முயற்சித்தார். அவருக்கு அப்படி அமர்ந்து பழக்கமில்லாததால் முடியவில்லை. அதனால் சற்று தூரத்தில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து அதில் அமர்ந்தார். பகவான் சொல்வதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்.
”உபதேசிக்கும் குரு மேலே இருக்க சீடர்கள் கீழே அமர வேண்டும். அதுதான் நியதி. அது தெரியாத இந்த வெள்ளைக்காரர் பகவானுக்குச் சரிசமமாக நாற்காலியில் அமர்ந்திருக்கிறாரே, இது என்ன நியாயம்?” சீடர் ஒருவர் மற்றொரு சீடரிடம் முணுமுணுத்தார். மேலும் பல சீடர்களுக்கும் அதுவே எண்ணமாக இருந்தது. அவர்களில் ஒருவர் எழுந்து வெள்ளைக்காரரிடம் சென்றார்.“நீங்கள் இதில் உட்காரக் கூடாது. கீழே தான் உட்கார வேண்டும்” என்றார்.“ஐயா, நான் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் என்னால் உங்களைப் போல் காலை மடக்கிக் கீழே உட்கார முடியவில்லை. எனக்கு அது பழக்கமுமில்லை” என்றார் அந்த வெளிநாட்டவர் ஆங்கிலத்தில்.“எங்கள் குருவுக்குச் சமமாக நீங்களும் உட்கார்ந்திருப்பது எங்கள் குருவை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. எல்லா சீடர்களும் இதையே நினைக்கிறார்கள்”
“ஓ.. சரி, என்னால் கீழே அமரவும் முடியாது. இப்படி நாற்காலியில் அமர்ந்தால் உங்களுக்கும் கஷ்டம். அதனால் நான் சென்று விடுகிறேன்” என்று சொல்லி விட்டு எழுந்து மெள்ள வெளியே நடக்க ஆரம்பித்தார்.இதை கவனித்துக் கொண்டிருந்த ரமணர், அந்த சீடரிடம், ”என்ன ஆச்சு, ஏன் வந்தவர் உடனே வெளியே போகிறார்?” என்று கேட்டார்.உடனே அந்தச் சீடர், “பகவான். அவரால கீழே உட்கார முடியாதாம். நாற்காலியில தான் உட்கார முடியுமாம். அப்படியெல்லாம் இங்க உட்கார்றது முறையில்ல. அது பகவானை அவமானப்படுத்தறமாதிரின்னு சொன்னேன். அவரும் சரின்னுட்டு போயிட்டார்” என்றார்.உடனே பகவான் ரமணர், “ஓஹோஹோ, குரு மட்டும்தான் உசந்த ஆசனத்துல உட்காரணுமா? சரிதான். இதோ இந்த மரத்து மேலே ஒரு குரங்கு உட்கார்ந்திண்டு இருக்கு. அதுவும் என்னை விட உசரமான இடத்தில் தான் இருக்கு. அதை என்ன பண்ணுவ? அதையும் வெளியில அனுப்படுவியா நீ? என்றார்.சீடர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பகவானையே பார்த்துக் கொண்டிருந்தார்.பகவான் உடனே, “இதோ பார், இந்த உலகத்துல யாரும் உசத்தியும் இல்லே! யாரும் தாழ்ச்சியும் இல்லே! அவரை உடனே கூப்பிட்டு அங்க உட்கார வைங்கோ.” என்றார் சற்றுக் கடுமையாக.சீடர்களும் அந்த வெளிநாட்டவரை அழைத்து வந்து ஆசனத்தில் அமர வைத்தனர்.

6.உள்ளே செல்ல அனுமதி இல்லை

ரமணருக்கு முதுமையுடன் நோயும் சேர்ந்து உடல் மிக நலிந்திருந்த சமயம். ஆனால் எப்போதும் யாராவது அவரைத் தரிசிக்க வந்தவண்ணம் இருந்தனர். மருத்துவரோ கண்டிப்பாக ஒய்வு தேவை என்று கூறினார். குறைந்தபட்சம் மதியச் சாப்பாட்டுக்குப் பின் பகவான் சற்று ஒய்வு எடுக்கட்டும் என்று மிகுந்த நல்லெண்ணத்தோடு தீமானித்த நிர்வாகம் ஒரு போர்டு வைத்தது. ‘பகல் பன்னிரண்டு மணி முதல் இரண்டு மணி வரை யாருக்கும் அனுமதியில்லை’ என்று அதில் எழுதியிருந்தது.
சாப்பிடப் போயிருந்த பகவான் திரும்பி வந்தார். போர்டைப் பார்த்தார். பேசாமல் கூடத்துக்கு வெளியே உட்கார்ந்து விட்டார்.பகவான் உள்ளே போகலாமே’ என்று மற்றவர்கள் கூறினர்.
‘யாருக்கும் அனுமதியில்லை என்று எழுதியிருக்கிறதே. அது நமக்கும் தானே’ என்று சொல்லிப் பகவான் எல்லோரையும் திகைக்க வைத்தார்.
7.வந்த வேலையைப் பார்
நடராஜன் என்பவர் பகவானின் பக்தர். அவர் முதன்முறை அண்ணாமலைக்கு வந்தபோது பகவான் ரமணரின் அருட்காட்சி கிடைத்தது. அதன் ஈர்ப்பினால் மறுமுறையும் அண்ணாமலைக்கு வந்தார். விடியற்காலையில் எழுந்தவர், மலை மேல் சென்று ஏகாந்தத்தில் திளைத்திருந்தார். அவ்வப்போது தோன்றிய உணர்வுகளை கவிதையாக எழுதிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை., ஆச்ரமத்தில் காலை உணவுக்கான நேரம் கடந்து விட்டது. உடனடியாக ஆச்ரமத்திற்கு விரைந்தார்.அங்கே எல்லோரும் உணவு உண்டு விட்டு ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்து கொண்டிருந்தனர். அதனால் நடராஜன் தயக்கத்துடன் ஒதுங்கி நின்றார். அங்கிருந்தவர்களில் ஒருவர், “ஏன் இங்கேயே நிற்கிறீர்கள் உள்ளே இலை போடப்பட்டு உங்களுக்கு உணவு தயாராக இருக்கிறது.. பகவான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். உள்ளே செல்லுங்கள்” என்றார்.நடராஜன் உள்ளே சென்றார். பகவான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நடராஜனுக்கும் இலை போடப்பட்டிருந்தது. சாப்பிடுமாறு அங்குள்ளோர் வலியுறுத்தவே கூச்சத்துடன் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் உணவை உண்டு விட்டு கை சுத்தம் செய்வதற்காக பகவான் எழுந்தார்.பகவான் எழுந்து நிற்கும்போது தாம் அமர்ந்திருப்பது சரியன்று என்று நினைத்தார் நடராஜன். அதே சமயம் இலையிலிருந்து எழுந்தால் மீண்டும் அமர்ந்து உண்பது நியதிப்படி சரியல்ல என்றும் எண்ணியதால் இருக்கையிலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தன் உடலை உயர்த்தினார்.அதைப் பார்த்த பகவான், “வந்த வேலையைப் பார்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார். ”சாப்பிடுவதற்காக வந்த நீ சாப்பிடு. அதை விட்டு விட்டு இந்த மாதிரி எல்லாம் எழுந்து நின்று எனக்கு மரியாதை செய்ய வேண்டியதில்லை” என்று பகவான் சொன்னதாக உணர்ந்தார், நடராஜன். ஆகவே மீண்டும் சரியாக இலை முன் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார். அதே சமயம் பகவானையே பார்த்துக் கொண்டிருந்தார். சமையற்கூட வாசல் தாண்டிய பகவான் திரும்பி நடராஜனை உற்றுப் பார்த்தார். பின் மீண்டும், “வந்த வேலையைப் பார்” என்று சொல்லி விட்டு படி இறங்கினார். நடராஜனுக்கு ஒரே திகைப்பு. பகவான் எதற்காக மீண்டும் அப்படிச் சொன்னார் என்பது தெரியாமல் குழம்பினார். “ஓ.. நாம் சாப்பிடுவதை விட்டு விட்டு பகவானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதைத் தான் பகவான் அப்படிச் சொல்கிறாரோ, ஒருவேளை கவிதை எழுதிக் கொண்டிருந்தோமே, அதை பாதியில் விட்டு விட்டு சாப்பிட ஓடி வந்து விட்டோம். அதைத் தான் சொல்கிறாரோ என நினைத்துக் குழம்பினார். பின் உணவை உண்டு விட்டு மீண்டும் மலைமேல் சென்று கவிதை எழுத ஆரம்பித்தார். மதியம் ஆச்ரமம் வந்தவர், உணவு உண்டு விட்டு பகவானின் ஹாலில் போய் அமர்ந்தார். அப்போது பகவான் இவரை மீண்டும் உற்றுப் பார்த்தார். பின் மறுபடியும், “வந்த வேலையைப் பார்” என்று சொன்னார்.. பகவான் ஏன் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்கிறார் என்பதும் தெரியவில்லை. பகவானிடம் விளக்கம் கேட்கவும் தயக்கமாக இருந்தது ஆகவே அதுபற்றிச் சிந்தித்து பேசாமல் அமர்ந்திருந்தார்.”ஓ.. நாம் எதற்கு அருணாசலம் வந்தோம்? கவிதை எழுதவா? இல்லை அருணாசலரை தரிசிக்க. பகவானின் உபதேசம் பெற. அதை விடுத்து எதை எதையோ செய்கின்றாய் என்பதைத் தான் பகவான் “வந்த வேலையைப் பார்” என்று சொல்லி குறிப்பால் உணர்த்துகிறார் என்று நினைத்தார்.சில நாட்கள் ஆச்ரமத்தில் தங்கினார். பின் தன் சொந்த ஊரான புன்னை நல்லூருக்குச் சென்றார். ஆனால் அங்கேயும் இருப்புக் கொள்ளவில்லை. “வந்த வேலையைப் பார்” என்ற குரல் அவருள் ஒலித்துக் கொண்டே இருந்தது தன் வேலையை விட்டு இட்டு ஆச்ரமத்துக்கே வருவதாக பகவானுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் பகவானின் சம்மதம் கிடைக்கவில்லை.தினந்தோறும் தனிமையால் அமர்வார். தியானத்தில் ஆழ்வார். பகவானைப் பற்றிச் சிந்திப்பார்.ஒருநாள் “வந்த வேலையைப் பார்” என்று பகவான் சொன்னதன் உண்மையான பொருள் அவருக்கு விளங்கியது. “உடல் தாங்கி வந்திருக்கும் நீ இந்த உடலல்ல. ஆத்மா என்பதை உணர். அதற்காகத் தான் நீ வந்திருக்கிறாய் என்பதைப் புரிந்து அந்த உண்மையில் நிலைத்திரு” என்பதையே பகவான் உபதேசமாக தனக்கு உணர்த்தியாக உணர்ந்தார். அதன்பின் தன் சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு ரமணாச்ரமம் வந்தார். பகவானின் அனுமதி பெற்று துறவறம் பூண்டார். ”சாது ஓம்” ஆனார். ’ஜானகி மா’ ஆச்ரமத்தில் சில காலம் வசித்தவர், பகவானின் மறைவுக்குப் பின் அருணாசலத்தையே சரண் அடைந்தார். அங்கேயே வாழ்ந்து நிறைவெய்தினார்.





No comments: