கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-7 குளிர்ந்த முகம் தந்திருவேன்

காடு, கழனிகளில் களை எடுக்கும் பெண்களில் பாடத்தெரிந்த ஒருத்தி காட்டுப் பாடல் ஒன்றைப் பாட மற்றப் பெண்கள் அப்பாடலை அமைதியாகக் கேட்டுக்கொண்டே களை எடுப்பார்கள்.

களை எடுக்கும் கழனிக்கு யாராவது புதிய ஆள் வருகிறது என்று தெரிந்தால், பாடலைப் பாடுகிறவள் வெட்கத்தால் பாடுவதை நிறுத்திக் கொள்வாள்.
அத்தகைய காட்டுப் பாடல்களை அனுபவித்துக் கேட்டு ரசிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள், மெல்ல அரவம் (சத்தம்) காட்டாமல், அப்பாடல் வரும் திசைக்குச் சென்று கழனியின் அருகில் உள்ள மரத்தோரம் பதுங்கி நின்று கொண்டு, அப்பாடலைக் கேட்டு அனுபவிக்க வேண்டும். தோகைவிரித்து ஆடுகின்ற மயிலின் அழகைத் தூரத்தில் நின்றே கண்டு ரசிப்பதைப்போல. . .

பெண்கள் மட்டும் வேலை செய்கிற இடத்தில்தான் காட்டுப் பாடல்களை, மனம்விட்டு பெண்கள் பாடுகிறார்கள்.

"எரசலடிக்குது கூதலடிக்குது
தள்ளிப்படு மாமா - கிட்டத்
தள்ளிப்படு மாமா.

தூரலடிக்குது குளிரடிக்குது
கிட்டப்படு மாமா - இன்னும்
கிட்டப்படு மாமா.

சாரலடிக்குது வாடையடிக்குது
சேர்ந்துபடு மாமா - நல்லாச்
சேர்ந்துபடு மாமா. . .”

என்று பாட்டு இசையோடு காற்றில் மிதந்து வருகிறபோது ஒருவித பரவசமும், கிலுகிலுப்பும், களை எடுக்கும் மற்றப் பெண்களையும் தொற்றிக்கொள்கிறது.

'தூரல்' என்றால், லேசான மழை. 'சாரல்' என்றதும் குற்றால சீசன் நம் நினைவுக்கு வருகிறது. 'எரசல்' என்பது ஓலைவேய்ந்த வீட்டுக் கூரையிலிருந்து தூவானமாக வீட்டிற்குள் விழும் மழைத்துளிகள்.

'சிறிய மழை' என்பதைக் குறிக்க நாட்டுப்புறத்து மக்கள் "எரசல், தூரல், சாரல்" என்று பல்வேறு சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இவை யாவும் தூய தமிழ்ச் சொற்களே! புதிய கலைச் சொற்களைத் தேடி அலையும் மொழியியலாளர்கள், கிராமத்திற்குள் சென்றால் ஆயிரக்கணக்கான, அற்புதமான புதிய தமிழ்ச் சொற்களைப் பெறலாம்.

இரவு பாயில் படுக்க ஆரம்பித்ததில் இருந்து, நச்சுமழை (சிறிய மழை) சிலுசிலு என்று பெய்து கொண்டே இருக்கிறது. பெரு மழை பெய்து கொஞ்ச (சிறிது) நேரத்தில் ஓய்ந்துவிட்டால் அவ்வளவாகக் குளிர் இருக்காது. நச்சு மழை சிணுசிணு என்று இரவெல்லாம் தூரிக்(தூத்திக்)கொண்டே இருந்தால், கடுமையான குளிர் இருக்கும்.

ஓலைக் குடிசைக்குள், கோரைப் பாயில் படுத்துக் கிடக்கிற புதுமணத் தம்பதிகளை அந்தக் குளிர் வெகுவாகத் தாக்குகிறது. என்றாலும், பகலெல்லாம் காடு,மேடுகளில் அலைந்த களைப்பில், 'அவன்' அயர்ந்து தூங்குகிறான். ஆனால், அடிக்கிற குளிரும், வாடைக் காற்றும் அவளைத் தூங்கவிடாமல் கிறங்கடிக்கிறது. காதல் உணர்ச்சி அவளைச் சுற்றிப் படர்கிறது.

காம உணர்வை, காதல் எண்ணத்தை ஒரு பெண் தானே முன்வந்து தெரிவிப்பதாகப் பாடும் பாடல்கள் ரொம்ப அபூர்வமாய்த்தான் கிடைக்கிறது. மேலே கண்ட பாடல் இவ்வகையைச் சார்ந்தது. சொற்செட்டும், இசையின் கட்டுமானமும், "தள்ளிப்படு-கிட்டப்படு-சேர்ந்துபடு" என்ற சொல்லாட்சிகளும் சாதாரண ஒரு காட்டுப்பாடலை, கவிதையை நோக்கி நகர்த்துகிறது. காட்டில் களை எடுக்கும் போது நீங்களும், மறைந்திருந்து அப்பெண்ணின் தேன்குரலில் மிதந்து வரும் இப்பாடலைக் கேட்டால்தான் இப்பாடலை முழுமையாக அனுபவிக்க முடியும்.

நவதானியங்களில் ஒன்று 'வரகு'. திணை அரிசி என்பதையே நாம் ஏட்டில்தான் பார்க்கமுடிகிறது. வரகரிசியை எங்கே போய்த் தேட. .?
பாறையில் பள்ளம் தோண்டி, அதையே உரலாகக் கொண்டு அதில் வரகைப்  (ஒருவித தானியம்) போட்டு, உலக்கை கொண்டு ஒரு காலத்தில் பெண்கள் குத்தி, வரகரிசியைப் புடைத்தெடுத்தார்கள். அப்படிப் பாறையில் வரகரிசி குத்தும்போது, சும்மாவா குத்துகிறார்கள்? அழகான பாடல்களையும் பாடிக்கொண்டு குத்துகிறார்கள். அப்பாடலின் ஒரு கண்ணியைப் பாருங்கள்.

  "வட்ட வட்டப் பாறையிலே
  வரகரிசி தீட்டயிலே. . .
  மச்சான் கொடுத்த சேலை
  ஆலவட்டம் போடுதடி. . .”

இப்பாடல் மூலம் 'ஆலவட்டம்' என்ற அருமையான தூய தமிழ்ச் சொல் நமக்கு அறிமுகமாகிறது.
இனி, ஒரு கிராமத்துக் காதல் காட்சியைப் பார்ப்போம். அந்த இளம்பெண் இடுப்பில் (நிறைகுடம்) தண்ணீர்க் குடத்தை இடுக்கிக்கொண்டு அன்ன நடை நடந்து வருகிறாள்.

குடம் நிறைய தண்ணீர் இருந்தாலும் அவளின் தாகம் தணிக்க அந்தத் தண்ணீர் உதவவில்லை. அவளுக்கு இருக்கும் தாகத்தைத் தீர்க்க அந்தத் தண்ணீர் உதவாது. அது காதல் தாகம்.

இன்ன நேரத்தில், இந்த வழியாகத் தான் நம் காதலி, தண்ணீர்க் குடத்துடன் வருவாள் என்று நம் 'புள்ளிக்காரனுக்கு'த் (காதலனுக்கு) தெரியும். எனவே, ஒரு மரத்தடியில், அவளைப் பார்க்க அவனும் காத்துக்கிடக்கிறான்.

தண்ணீர்க் குடத்துடன், காதலனைக் கடந்து செல்லும் காதலி,

  "தலையிலே தண்ணிக் குடம்
  தாக மெல்லாம் உங்கமேலே
  தண்ணிக் குடத்துக் குள்ளே
  தளும்பு தையா எம்மனசு. . .”

என்று இடுப்பில் இருக்கும் தண்ணீர்க் குடத்தோடு தொடர்புடைய ஒரு பாடலைப் பாடிக்கொண்டு செல்கிறாள். அவள் இடுப்பில் இருக்கும் குடத்திற்குள் தண்ணீர் மட்டுமா தளும்புகிறது (குதியாட்டம் போடுகிறது) அவள் மனசும் சேர்ந்தல்லவா. . குதியாட்டம் போடுகிறது.

பாடல் வரிகள் எவ்வளவு எளிதாகப் பாமர மக்களின் வாயிலிருந்து வந்துவிழுந்து விடுகிறது பாருங்கள்.

மறுநாள் காதலி, தோட்டத்திற்குச் செல்கிறாள். மழைவரும் போல் இருக்கிறது. எனவே, அக்கம்பக்கத்துத் தோட்டத்தில் வேலை, ஜோலி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தத்தம் வீட்டைப் பார்த்து ஓடிவிடுகிறார்கள்.

காதல் வயப்பட்ட கால்கள் தோட்டத்தைவிட்டு நடக்கவும் மறுக்கிறது. 'மழை' ஒரு 'சாக்கு' (காரணம்). மழையைச் சாக்கு வைத்துக் (காரணம் காட்டி), காதலி, காதலனைச் சந்திக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறாள்.

இயற்கையும் அவளுக்கு 'ஒத்தாடுகிறது' (ஒத்துழைக்கிறது). உச்சி வானத்தில் இருந்த கரிய மேகம், உருகி, அப்படியே, மழையாகக் கொட்டுகிறது. மழையில் நனையாமல் இருக்க, காதலி ஒரு மரத்தின் அடியில் ஒண்டுகிறாள் (பம்முகிறாள்). மாமரமும் எத்தனை நேரம்தான் அவளைக் காப்பாற்றும்? காலமோ, ஐப்பசி மாதம். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்யும். அதுவும் இது அந்திப்பொழுது. 'அந்திமழை (நாம்) அழுதாலும் விடாது' என்கிறது ஒரு பழமொழி. அவள், இப்போது மழையில் தொப்பல் தொப்பலாக நனைந்துவிடுகிறாள்.

காதலன், காதலியைக் கவனிக்காமல், மழையில் நனைந்தபடியே கரையில் செல்கிறான். கரையில் போகிற காதலனைக் கைதட்டிக் கூப்பிடவா முடியும்? ஆனால் பாட்டுப்பாடி அவனை அழைக்கலாம் தப்பில்லை. பாடல் உருவாகிவிடுகிறது.

  "தொப்பு தொப்பா நனைஞ்சிருக்கேன்
  தோட்டத்துக்கு வந்திருய்யா. . .
  கூப்பிடாம வந்தியானா. . .
  குளிர்ந்த முகம் தந்திடுவேன்"

என்று பாடுகிறாள்.

தொப்பல் தொப்பலாக அவள் நனைந்துவிட்டாள். எனவே, அவள் உடுத்தியிருந்த உடையெல்லாம் ஈரமாகிவிட்டது. நனைந்த உடைகள் அவள் உடம்போடு, ஒட்டிக்கொண்டதால், அவளின் இளமை வனப்பு இன்னும் அதிகமாக வெளியே தெரிகிறது.

அவனும் நனைந்துவிட்டான். 'குளிர்' உடம்பு 'காதல் சூடு' தேடுகிறது. என்றாலும் அவள் மிக கவனமாக, 'காதலனே. . நீ வா. . வந்தாலும் உனக்கு என் முகத்தை மட்டும்தான் (முத்தமிட்டுக் கொள்ள) தருவேன் என்று வெளிப்படையாகச் சொல்கிறாள். உடம்பைத் தரமாட்டேன் என்று மறைபொருளாகச் சொல்கிறாள். 'களவு ஒழுக்கம்' என்பது இதுதான் (செய்கிறது களவாக இருந்தாலும் அதிலும் ஒரு ஒழுங்கு கட்டுப்பாடு வேண்டும்).

இனி வேறொரு காதல் காட்சியைப் பார்ப்போமா?

  "கிழக்க மழ(ழை) கருக்கயிலே - நான்
  கீரைத் தண்டு அறுக்கயிலே - அடப்
  பாவி, உன்னை நினைக்கையிலே - கையில்
  பட்ட தைய்யா பன்னருவா. . .”

மேலே கண்ட பாடலில் 'அடப்பாவி' என்ற சொல் வசமாக வந்து விழுந்திருக்கிறது. இப்பாடலில் உள்ள 'பாவி' என்ற சொல்லுக்கு (அகராதியை மடியில் வைத்துக்கொண்டு) நேர் பொருள் பார்க்கக் கூடாது. 'பாவி!' என்பது இங்கு வசவு வார்த்தை அல்ல! பாராட்டு!

உணர்வுபூர்வமான வாக்கியங்களுக்கு நேர் பொருள் பார்க்கக்கூடாது. இங்குதான் 'தொனி' என்பது பயன்படுகிறது.

'சண்டாளப்பாவி என்னமாப் பாடுகிறான்?' என்று ரசிகர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு அனுபவித்து ரசித்து, பாடல் பாடுகிறவரைப் பற்றிச் சொல்கிறார்.
இங்கு 'சண்டாளன்', 'பாவி' என்ற வசவுச் சொற்கள் பாராட்டும் தொனியில் (பொருளில்) பயன்படுத்தப்படுகிறது.

மொழியில் சொற்களுக்கான இடத்தைவிட 'தொனி'க்கான இடம்தான் கவித்துவமானது. கலையாளர்களுக்கு 'தொனி' எப்போதும் கைகொடுத்துக்கொண்டே இருக்கும். தொனிதான் மொழியை உணர்ச்சி பூர்வமாகக் கையாள மிகவும் உதவுகிறது.

மொழி ஆராய்ச்சியை இத்துடன் நிறுத்திக் கொண்டு காட்டுப் பாடலுக்கு வருவோம்.

கிழக்கே மழை கருக்கிறது. எனவே விரைவில் மழை வரும் என்று நினைக்கிறது, அவள் மனம். ஆகவே, வேகமாக கீரைத்தண்டுகளைப் பன்னருவாளால் அறுக்க ஆரம்பிக்கின்றாள். அவசர கதியில் மனம் பரபரத்துக் கொண்டிருக்கும்போது, காதல் நினைப்பும் வந்து மனதிற்குள் புகுந்துவிடுகிறது. மழை வருமோ, என்று பரபரத்த அவள் மனது இப்போது மேலும் கொதிப்படைய ஆரம்பித்துவிடுகிறது. அவளது அறிவு ஒருபாதையிலும், மனது வேறொரு பாதையிலும் பயணிப்பதால் சிறு விபத்து ஒன்று ஏற்பட்டுவிடுகிறது. ஆம், கீரைத்தண்டை அறுக்க வேண்டிய பன்னருவாள், தவறி, அவளின் கை விரலைப் பதம் பார்த்துவிடுகிறது. இனி மேலே கண்ட பாடலை மீண்டும் ஒருமுறை பாடிப் பாருங்கள். பாடலை முழுமையாக அனுபவிக்க முடியும்.
மழைக்காலம் வந்துவிட்டால், காதலர்களுக்குக் கொண்டாட்டம்தான் போலும். அடாது மழை பெய்தாலும் விடாது காதல் செய்து கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

  "இடியிடிச்சு மழ(ழை) பொழிய
   இடும்பன் குளம் தெப்பமிட
  குடையோடு நான் வருவேன்
   குணமயிலே தூங்கிறாதே!”

என்று காதலியைப் பார்த்துக் காதலன் பாடுகிறான். 'மழை' என்ற திரைப்படத்தில் காதல் உணர்வும், மழையும் இணைத்துக் காட்டப்பட்டது, இதுபோன்ற மழை மையக் காதல் பாடல்களின் தாக்கத்தால்தான் போலும்!

இனி வாசமிக்க ஒரு காதல் பாடலைப் பார்ப்போம்,

  "வாசம் நிறைஞ்ச புள்ளே - வயல்
   வரப்பு மேலே போற புள்ளே! - நீ
  பேசுகிற பேச்சினிலே
   பிச்சிப்பூ வாசமடி - நீ
  இழுத்துவிடும் மூச்சினிலே
   இருவாச்சி வாசமடி - உன்
  பாசம் குறைஞ்ச தென்ன. . .?
   பக்கம் வர வெட்கமென்ன. . .?

என்று காதலன் பாடுகிறான், அதைக் கேட்ட காதலி,

  "வாய்க்கால் தண்ணி பாச்ச
   வாமடை போடும் மச்சானே
  நேசம் குறைய வில்லை - உன்
   நினைப்பும் மறக்க வில்லை
  உன்னோடு வாழ்வதற்கு - நான்
   உருகாத நேரமில்லை! - நான்
  உருகாத நேரமில்லை! “

என்று பாடுகிறாள்.

பாட்டு என்றால் பரவசம்தான்; அதிலும் காதல் பாட்டு என்றால் கனிரசம்தான்; அதிலேயும் காட்டுப்புற காதல் பாட்டு என்றால், சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பெய்வது போலத்தான். நாட்டுப்புறத்து மக்கள் நமக்காகத் தந்துவிட்டுச் சென்றிருக்கின்ற இதுபோன்ற இலக்கியச் சுவைகளை, ஆரஅமர உட்கார்ந்து ரசித்துச் சுவைக்க முடியாமல்,

  "நில்லும் எனக்கினி நேரமில்லை - இன்னும்
   நீண்ட வழிபோக வேண்டுமம்மா. . .”

என்று ஆறு பாடுவதாகக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியதைப் போன்று நாம் இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கிறோம்

No comments: